vithaikulumam.com
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

சுயமரியாதை மாதம் 2021: Pride with a Purpose

உலகெங்கும் பரந்து வாழும் பாற்புதுமையினர் தமக்குரிய அடையாளமாக ஆனி மாதத்தினை அடையாளப்படுத்தி சுயமரியாதை மாதமாக சிறப்பித்து வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் இச் சுயமரியாதை மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் பாற்புதுமையினர் தமது அடிப்படை உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் இயங்கிக்கொண்டிருக்கும் சங்கங்கள், கழகங்கள், அமைப்புகள் ஊடாக ஒன்றிணைந்து சுயமரியாதைப் பேரணி ஒன்றை ஒழுங்கமைத்து தமது சமூகத்தின் இருப்பை உலகிற்கு பறைசாற்றி வருகின்றனர். அவ்வாறு ஒழுங்கமைக்கப்படும் சுயமரியாதைப் பேரணியில் பாற்புதுமையினர் தம்மைத் தாமாகவே வெளிப்படுத்தி மிகவும் மகிழ்ச்சிகரமாகத் தமது வானவில் கொடியினை ஏந்தி ஒவ்வொரு வருடமும் தமது சமூகம் தொடர்பான ஏதாவது ஒரு செய்தியினை உலக மக்களுக்கு வெளிப்படுத்தி செல்கின்றனர்.

மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறான சுயமரியாதைப் பேரணிகளில் அந்நாட்டு அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் பங்குபற்றி பாற்புதுமையினரின் செயற்பாடுகளுக்குப் பெருமை சேர்ப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இது அவர்களின் சமூக அங்கீகாரத்திற்கு வலுச்சேர்க்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. பாற்புதுமையினரின் சுயமரியாதைப் பேரணி தொடர்பான செய்திகள் அந்நாட்டு உத்தியோகபூர்வ வலைத்தளங்களில், செய்தித்தாள்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனைச் சமூகவலைத்தளங்களில் இலகுவாக நாம் காணக்கூடியதாக உள்ளது.

எமது அண்டை நாடான இந்தியாவில் பாற்புதுமையினர் பல காலமாக பல்வேறுபட்ட போராட்டங்களை நடத்தி அப்போராட்டங்களின் விளைவாக இரு சட்டபூர்வ வயதினைக் கடந்த ஒரே பாலினத்தைக் கொண்டவர்கள் பாலுறவு கொள்வதைக் குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு இல 377 இல் மாற்றத்தினைக் கொண்டுவந்து தமக்கான சமூக இருப்பினை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்படத்துறை சார்ந்தோர் எனப் பலரும் பாற்புதுமையினருக்கு ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் பாற்புதுமையினர் தொடர்பில் பல ஆதரவான மாற்றங்கள் தமிழ்நாட்டு அரசால் ஏற்படுத்தப்பட்டமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இது இவ்வாறு நிற்க, இலங்கையில் பாற்புதுமையினர் தொடர்பில் ஏன் அதிக கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர்களுக்கு ஏதுவான மற்றும் அவர்களின் சமூக இருப்பை உறுதிசெய்யும் சட்ட ஏற்பாடுகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதனை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்றளவும் அவர்களால் அடித்தளமிடப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேதான் ஆட்சி செய்யப்படுகின்றது. எமது நாட்டில் வாழும் பல்லினங்களுக்கு ஏற்புடைய வகையில் சட்டங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது இயற்றப்பட வேண்டும் எனவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளகூடிய அரசியலைமைப்பொன்று உருவாக்கப் படவேண்டும் என்பது நாட்டில் தற்பொழுது பேசு பொருளாக காணப்படுவதனை அவதானிக்ககூடியதாக உள்ளது.

ஒரு சமூகத்திற்குரிய அடிப்படைச் சட்ட ஏற்பாடுகள் அம் மக்கள் வாழும் நாட்டில் காணப்படாதவிடத்து அவர்களால் பிற சமூக மக்களைப் போல் சுமூகமான முறையில் வாழமுடியாது. மேலும் அவர்கள் தமது சமூக இருப்புக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகுவர். இந்த நிலையே இன்று இலங்கையில் வாழும் பாற்புதுமையினர் எதிர்நோக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கில் மிகவும் சவால்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்குரிய பிரதானமான காரணத்தினை ஆராய்ந்து பார்த்தால் பாற்புதுமையினர் தொடர்பில் ஓர் அடிப்படை புரிதல் இன்மையே காணப்படுகின்றது. பிறப்பின் போது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அடையாளப்படுத்தப்பட்டு சமூகக் கட்டமைப்பில் வளர்ந்து வரும் சந்தர்ப்பத்தில், தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பினை வெளிப்படுத்தும் பொழுதும், தம்மை பாற்புதுமையினராக தாம் சார்ந்த சமூகத்தில் தம்மை வெளிப்படுத்தும் பொழுதும் அவர்கள் சார்ந்த சமூகத்தில் இது தொடர்பில் சரியான புரிதலின்மையால் அதன் விளைவாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுதல், குடும்ப உறுப்பினர்களால் சித்திரைவதைக்கு உட்படுத்தப்படுதல், பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடுதல், வேலையைப் பெற்றுக்கொள்வதில் புறக்கணிக்கப்படுதல், வேலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கப்படுதல், போன்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட வடகிழக்கில் வாழும் பாற்புதுமையினர் இன்றளவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவண்ணமுள்ளனர்.

தமிழர் பகுதியில் தம்மை பாற்புதுமையினர் என்று உணர்ந்த பின்பும் அதனைத் தாம் சார்ந்த சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு பலரும் தயங்குகின்றனர். இன்னொரு பாற்புதுமையினருடன் சென்று தம்மை அடையாளப்படுத்திப் பேசுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். பாற்புதுமையினர் தொடர்பான ஒன்றிணைந்த செயற்பாடுகளில் பங்குபெறத் தயக்கம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள மனதளவில் விரும்பினாலும் சமூகத்தில் பாற்புதுமையினராக அடையாளப்படுத்தப்படுபவர்களுக்கு கிடைக்கும் எதிர்மறைப் பின்னூட்டங்கள் மற்றும் வசைபாடுகளின் காரணமாகத் தயங்குகின்றனர். இதன்காரணமாகவே இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாற்புதுமையினரின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது. இருப்பினும் தமிழ்பேசும் பாற்புதுமையினரின் நலனை அடிப்படையாகக் கொண்ட யாழ்ப்பாண சங்கத்தின் அளப்பரிய முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளின் விளைவாக 2017ம் ஆண்டிற்கு முன்னைய காலத்தைவிட அண்மைக்காலத்தில் குறிப்பிட்டளவு புரிதல் ஒன்று ஏற்பட்டுள்ளமையானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இலங்கையில் வாழும் பாற்புதுமையினரின் அடிப்படை அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கவும் அவர்களுக்கு ஆதரவுக்கரம் காட்டவும் சில தன்னார்வ சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஆனால் இவ் அமைப்புகளில் பல தென்னிலங்கையினை அடிப்படையாகக் கொண்டவை. எனவே அவ்வமைப்புகள் தாம் சார்ந்த பிரதேச மக்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இதனால் தமிழ் பேசும் பாற்புதுமையினர் எதிர்கொள்ளும் இடர்கள் உரிய முறையில் பலரது கவனத்திற்கும் கொண்டுவரப்படுவதில்லை.

தமிழ்பேசும் பாற்புதுமையினருக்கு ஆதரவு தருவதற்காகவும் அவர்களின் சமூக இருப்பினை உறுதி செய்வதற்காகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அனைத்து தமிழ் பேசும் பாற்புதுமையினரையும் ஒன்றினைப்பதற்காகவும் யாழ்ப்பாண சங்கம் செயற்பட்டு வருகின்றது. யாழ்ப்பாண சங்கமானது பாற்புதுமையினர் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வடகிழக்கில் உள்ள தோழமை அமைப்புகளுடன் இணைந்து பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்து வருகின்றது. பல்வேறு சமூக கலாசார கட்டுப்பாடுகளால் கட்டுண்ட பிரதேசமாகக் காணப்படும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள பாற்புதுமையினர் தமது பால்நிலை மற்றும் பாலீர்பினை உணரும் சந்தர்ப்பத்தில் அதனை தாம் சார் சமூகத்தில் தமது பால்நிலையையும் பாலீர்ப்பினையும் வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். எனவே இத் தமிழ்ச்சமூகத்தில் பாற்புதுமையினர் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாண சங்கத்தின் செயற்பாடுகள் அமைந்தவண்ணமுள்ளன.

யாழ்ப்பாண சங்கமானது தமிழ்பேசும் பாற்புதுமையினர் சார்பாக 2018ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளில் சுயமரியாதை மாதத்தினை அனைவரையும் ஒன்றிணைத்து சிறப்பித்து வருகின்றது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நடப்பாண்டு சுயமரியாதை மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் இணைய வழியிலான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை Pride with Purpose என்னும் தொனிப்பொருளில் நடாத்தி வருகின்றது.

மேலும் கொவிட் நோயின் பரவல் மற்றும் தாக்கம் காரணமாக பாற்புதுமையினரில் பலர் பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவண்ணமுள்ளனர். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுவரும் பாற்புதுமையினரும் இந் நோய்தாக்கத்தால் தொடர்ந்து சிகிச்சைகளைப் பெறமுடியாமலும் தமக்குரிய மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாமலும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இவர்களுக்கு உதவிகளை வழங்கும் முகமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதியுதவிகளைப் பெற்று யாழ்ப்பாண சங்கம் அவர்களுக்கான பேராதரவினை வழங்கி வருகிறது. மேலும் தமது பால்நிலை மற்றும் பாலீர்பு வெளிப்படுதலின் போது ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு அவர்களுக்கான சட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுத்தலிலும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ உளநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் யாழ்ப்பாண சங்கம் செயற்பட்டு வருகின்றது.

பாற்புதுமையினருக்கு ஆதரவான சட்ட ஏற்பாடுகள் காணப்படாத நிலையில் சமூகக் கட்டுப்பாடுகளாலும் விழுமியங்களாலும் கட்டுண்டு இருக்கும் தமிழர்களின் பிரதேசங்களில் பாற்புதுமையினர் தொடர்பான ஆக்கபூர்வமான பணி நடவடிக்கைகளுக்கு நிரந்தர நிதி பெறும் மூலங்களும் இல்லாத நிலையில் செயற்படுவதென்பது மிகவும் பகீரதப்பிரயத்தமான ஒன்றாகும். எனவேதான் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் அழைப்பு விடுகின்றோம். உங்களை சூழ உள்ள பாற்புதுமையினர் தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பினை வெளிப்படுத்தும் பொழுது அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மேலும் வடகிழக்கில் வாழும் பாற்புதுமையினரே, உங்களை அடையாளப்படுத்துவதற்குத் தவறாதீர்கள். பால்நிலை மற்றும் பாலீர்ப்பு என்பது ஒவ்வொரு மனிதரதும் அடிப்படை உரிமை. ஆகவே அதனை வென்றெடுக்க ஒன்றிணையுங்கள். தமிழர்களின் பூர்விகமான வடகிழக்கில் பாற்புதுமையினர் தமக்கான வானவில் கொடியினை ஏந்தி சுயமரியாதைப் பேரணியை நடாத்தி தமது இருப்பினை உறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தோழமையுடன்,
மகிழ்வன் (செயற்பாட்டாளர், யாழ்ப்பாண சங்கம்: தமிழ்பேசும் LGBTQIA+ சமூகம்)

Related posts

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

vithai

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

vithai

சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த IBC உரையாடல்

vithai

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை -மோட்டார் சைக்கிள் குறிப்புகள் – 3

vithai

“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்

vithai

Leave a Comment