vithaikulumam.com
கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

இயற்கையின் வானவில் கொடி – சமத்துவ அடையாளம்

வர்ணங்கள் என்பது வாழ்வின் பெரும்பகுதியை ஆட்கொண்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு வர்ணங்களும் ஏதோவொன்றின் பிரதிபலிப்பையே தெரிவிக்கின்றன எனலாம். அந்தவகையில் பாற்புதுமையினர் பற்றிய அசைவுகளில் “வானவில் வர்ணங்கள்” எனப்படுகின்ற வர்ணங்கள் மிகவும்முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

பாற்புதுமையினருக்கான ஒவ்வொரு அசைவுகளிலும் கில்பேர்ட் பேக்கர் என்பவரால் 1978களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்த வானவில் வர்ணக் கொடியானது மிக முக்கியபங்கு வகிக்கின்றது. ஆரம்பத்தில் இளஞ்சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலப்பச்சை, நீலம், ஊதா ஆகிய எட்டு வர்ணங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஒவ்வொரு வர்ணங்களும் முறையே பால், வாழ்க்கை, குணப்படுத்துதல், சூரிய ஒளி, இயற்கை, மாயம், அமைதி, ஆவி ஆகிய பொருள்களை குறித்து நிற்கின்றது.

(இந்த வானவில் வர்ணக் கொடியானது 1978 இல் சான் பிரான்சிஸ்கோவின் ஐக்கிய நாடுகளின் பிளாசாவில் பறக்கவிடப்பட்டது. இது ஜேம்ஸ் மெக்னமாராவின் புகைப்படமாகும்) நியூயோர்க் நகரின் நவீன கலை அருங்காட்சியகமானது இவ் வானவில் வர்ணக் கொடியினை பாற்புதுமையினருக்கான நிரந்தர வர்ணக்கொடியாக உலகளாவிய ரீதியில் அறிவித்திருந்தது.

“கிட்டத்தட்ட 40ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் சார்ந்து மிகவும் சக்திவாய்ந்த, அர்த்தமுள்ள மற்றும் அழகியல் ரீதியாக பயனுள்ள அடையாளமாக இக் கொடியானது பணியாற்றியுள்ளது”. மேலும் “மாறிவருகின்ற உலகத்தில் புதிய சின்னங்களை வடிவமைத்து உருவாக்குவதென்பது மனித வாழ்க்கைக்கு வரையறையையும் வழிநடத்துதலையும் வழங்குகின்றதொரு வழியாகும்” என்பதும் நியூயோர்க் நகரின் நவீன கலை அருங்காட்சியகத்தின் மூத்தமேற்பார்வையாளரான பவொலா அன்டோனெல்லி என்பவரது கூற்று.

இவ் வர்ணக்கொடியை தனது 27வது வயதுகளில் கில்பேர்ட் பேக்கர் உருவாக்கியிருந்தார். “இந்தக்கொடியானது ஏனைய கலைவடிவங்களிலிருந்து மாறுபடுகின்றது. இது தனி ஒரு ஓவியமோ இல்லை துணியோ அல்லது ஒரு சின்னமோ மட்டுமல்ல. இது பல வழிகளில் செயற்படுகின்றது. தற்பாலின சமூகத்திற்கு அப்படியானதொரு சின்னம் வேண்டும் என நான் நினைத்தேன். எல்லோரும் உடனடியாகப் புரிந்துகொள்ளும் மக்களாக நாம் மாறுவதற்கான மாற்றம் எமக்குத் தேவை.” மேலும் “எனக்குத் தைக்கத் தெரியும். எங்களுக்குத் தேவையானதைச் செய்ய, நான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தேன்” என்று அவர் இவ் வர்ணக்கொடி சார்ந்து தனது கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் “எமக்கு, எம்மைப் பிரதிபலிப்பதற்காக அழகான ஒன்று அதுவும் எம்மிடமேயிருக்கின்ற ஒன்று தேவையாயிருந்தது. இதற்கு வானவில் மிகவும் சரியான தெரிவாகப்பட்டது. ஏனென்றால் இனம், பாலினம், வயது போன்ற அனைத்து விதமான பன்முகத்தன்மைகளோடும் பொருந்திப்போகின்றது. மேலும் இது இயற்கையான கொடி – வானத்திலிருக்கின்றது” என்பதும் அவருடைய கூற்றாகும்.

இவ் வானவில் வர்ணக்கொடியின் பயன்பாட்டின் முன்னர், இவர்கள் இளம் சிவப்பு வர்ணத்திலான முக்கோணக் குறியீடு ஒன்றையே தமக்கான அடையாளமாகப் பயன்படுத்தியிருந்தனர். இவ் அடையாளமானது நாஜிக்களின் வதைமுகாம்களில் இவர்களை அடையாளம் காணப் பயன்பட்ட குறியீடாகக் காணப்பட்டமையால் இவ்வானவில் வர்ணக்கொடி பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

இன்று பாவனையிலுள்ள வானவில் வர்ணக் கொடியானது சிவப்பு,செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா ஆகிய ஆறு வர்ணப்படைகளை உள்ளடக்கியுள்ளது. வாழ்க்கைக்கு சிவப்பு, குணப்படுத்த செம்மஞ்சள், சூரிய ஒளிக்கு மஞ்சள், இயற்கைக்கு பச்சை, நல்லிணக்கத்திற்கு நீலம் மற்றும் ஆவிக்கு ஊதா என்பவற்றை இக்கொடி உள்ளடக்கியுள்ளது.

இவ்வானவில் வர்ணக் கொடி என்பது மக்களை இணைக்கின்றதான ஒரு விடயமாக செயற்படுகின்றது. வானவில் வர்ணமானது ஒரு அன்பின் வழியானதொரு ஆத்மாவாகவும், ஒரு பாதுகாப்பின் சக்தியையும், பலமனங்களின் ஒரே மொழியாகவும், ஒரு பலம்பொருந்திய சக்தியாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

-பிறைநிலா கிருஷ்ணராஜா-

(தகவல் மூல உதவி : இணையம்)

Related posts

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai

தொன்மயாத்திரை – கடலுரையாடல்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

vithai

நிலத்தடி நீர் மாசுபடல் தொடர்பில் போராட்டங்களின் பின்னான பொதுவெளி உரையாடல்

vithai

தொன்ம யாத்திரை – 3 நெடுந்தீவு

vithai

பவளப்பாறைகளை உண்ணக்கூடிய மெளனம்

vithai

Leave a Comment