vithaikulumam.com
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி

1
எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத ‘இறைச்சி, மீன், முட்டை’ ஆகிய நல்லுணவுகளை தினமும் கிடைக்கும், என்ற கனவுடன் கொழும்பிலுள்ள பணக்கார வீடு ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறாள். ஆசிரியர் இறைச்சி, மீன் , முட்டை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி அவளுடைய கனவாக விபரிக்கிறார். இப்படியாகக் கதை வளர்ந்து சென்று அவள் வேலையை விட்டு விட்டு சுதந்திரமாக தந்தையுடன் வீடு திரும்புவதாகக் கதை முடியும். பிள்ளை இறுதியில் தந்தையிடம் ‘நான்வரத்தான் போறன்’ என்று அழுத்திச் சொல்வாள். அந்தச்சிறுமிக்கு திரும்புவதற்குரிய வாய்ப்பொன்று கதையில் இருந்துவிடுகிறது. ஆனால் சமூக நடைமுறையில் வறுமையும் சூழலும் திரும்புவதற்குரிய வாய்ப்பைத் தருவதில்லை. இக்கதை எழுதப்பட்ட எழுபதுகளின் சூழல் இன்னுமும் மாறியதாகத் தெரியவில்லை மாறாக அது ‘இயல்புபடுத்தப்பட்டிருக்கும்’ பரிசுகேட்டைத்தைதான் எதிர்கொள்கிறோம்.

இங்கே நடப்பது ஏழை – பணக்காரர் என்ற வர்க்கப்போர் மட்டும்தான் என்பதும் ஒரு வகை பிரபலமாக்கப்பட்ட கட்டுகதையாக மாறிவிட்டது. இவை பண்பாட்டில் – சமூகத்தில் இருக்க கூடிய வெவ்வேறு வன்முறைகளின் கூட்டு அரசியல் என்பது உணரப்படாமலே இருக்கின்றது. குழந்தைகள் ,பெண்கள் அபூர்வமாகத் தனிநபர்களால் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றார்கள் என்பதும் அக்கட்டுக்கதையின் இன்னொரு பகுதிதான். அவர்கள் அபூர்வமாக அல்ல அவர்கள் அன்றாடத்தில் வைத்தே துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை.

சட்டத்திலும் சாசனத்திலும் இருக்க கூடிய எந்தப்பகுதியும் நடைமுறையில் பிள்ளைகளுக்கு உதவுவதில்லை. பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது, துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, அவர்களுடைய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்பது நமக்குத்தெரியும் தானே இல்லையா? பிள்ளைகள் வளர்ந்தவர்களைவிடவும் சுதந்திரத்தை விரும்பக்கூடியவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் சகல பாதுகாப்பையும் சமமாக நடத்தப்படவும் உரித்துள்ளவர்கள். உண்மையில் இவை யாவும் நமக்குள் வெறும் தகவலாக இருக்கின்றன.

2

இஷாலினி துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ரிசாட் பதியுதீன் என்ற பிரபலமான அரசியல் பிரமுகரின் வீட்டில் அவருக்கு இந்த அநீதி நடந்திருக்கிறது. உண்மையில் பிரபலமான யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்காவிட்டால் இது பத்திரிக்கை ஒன்றின் நான்காவது அல்லது ஐந்தாவது பக்க துண்டுச்செய்திதான் இல்லையா? ரெஜினாவுக்கும் செயாவிற்கும் இதுதானே நடந்தது? இங்கே என்னை அச்சப்படுத்துவது நாம் ஒரே மாதிரியான கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் வெவ்வேறு விதமான எதிர்வினைகளைத் தெரிவு செய்கிறோம் என்பதுதான். யார் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விடவும் யார் இதனைச் செய்திருக்கிறார்கள் என்பதை முதலில் தேடி அறிகிறோம். அது நமக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படுமா என்று பார்க்கிறோமா என்ற சந்தேகம் எழாமலில்லை. அல்லது துயரப்பட்டாலும், கோபப்பட்டாலும் நாம் அந்ததந்த சம்பவத்துடன் அடங்கிவிடுகிறோம். ஒரு குற்றம், வன்செயல் நீதிமன்றத்தின் தீர்ப்போடு மறக்கப்பட்டு விடுகிறது. தனிநபர்கள் மட்டும் தண்டனைக்கு உட்படுகிறார்கள். குற்றமும் அநீதியும் தப்பி இன்னொரு ஆளைத்தேடிப்போய்விடுகிறது.
வரலாற்றில் திரும்பத்திரும்ப மோசமான தனிநபர்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு இலங்கையில் காலனிய காலத்திற்கு பிறகு சிறுவர் உரிமைகள்,பெண்களுக்குரிய பாதுகாப்பு என்பன பற்றி சட்ட மூலங்கள் ஊடாகவும் சமூக பாதுக்காப்பு ஊடாகவும் விடயப்பரப்புகள் மேம்பட்ட பிறகு, புறக்கணிப்பு, வேலைக்கு அமர்த்துதல், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுதல் , சிறுவர் போராளிகள், கட்டாய ஆட்சேர்ப்பு, கொலை- தற்கொலை – என்று செய்திகளாகவும் தகவல்களாகவும் பகிரப்பட்ட அன்றாட செய்திகளில் நமக்கு ஞாபகம் உள்ள வற்றைத் தொகுத்துப்பார்த்தாலே பதைக்கிறது. கிரிசாந்தி, சேயா, வித்தியா, ரெஜினா முதற்கொண்டு நேற்று இஷாலினி வரைக்கும் தெரிந்த செய்திகளே ஞாபகத்தை உலுப்பி விடக்கூடியவை. தனிநபர்களுடைய கிட்டிய ஞாபகங்களில் இவ்வளவு இருக்கும் போது. மொத்தச்சமூகத்தில் எவ்வளவு இருக்கும்? சொல்லப்படாத மறைக்கப்பட்ட சம்பவங்கள், உடல் உள பாதிப்புக்கள் அன்றைக்கே மறைந்து போய் விட்டதா என்ன? இந்தச் சமூகத்தில் இனவாதத்தாலும் மதவாதத்தாலும் சாதியாலும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய கூட்டு ஞாபகங்களுக்கு சற்றும் சளைக்காதது குழந்தைகள், மீது நிகழ்த்தப்படக் கூடிய அநீதிகள்.

இஷாலினி பாலியல் துஷ்பிரயோகத்தின் பிறகு தீமூட்டப்பட்டிருக்கிறார். அல்லது அதற்கு தூண்டப்பட்டிருக்கிறார். இஷாலினி வேலை செய்த இடமும் தற்போதுள்ள அரசியல் சூழலும் ‘பெரிய இடத்து விவகாரமாக’ பற்களில் அசைபோடப்படுகின்றது. குறிப்பாக இலங்கை அரசியலில் இஷாலினி ஒரு பகடைக்காயாக மாறுகிறார். இஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும். சந்தேகமே இல்லாமல் நாம் அனைவரும் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் இது ஒரு சம்பவமாக தனிநபர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் பிறழ்வாக மட்டும் கடந்து போகக்கூடிய ஆபத்தைத்தான் சமூகம் செய்யப்போகின்றதா? அல்லது பொதுப்புத்தியில் உள்ளதைப்போல் இது ஏழை- பணக்காரர் போராட்டத்தின் ஒரு பகுதி அநீதி மட்டும்தானா? இஷாலினி இவ்வாறானதொரு அநீதிக்குப் பலியாகும் முதல் மலையகப் பெண் பிள்ளையோ கடைசிப் மலையகப் பெண் பிள்ளையாகவோ இருக்கிறார் என்று யாரேனும் உறுதி தரமுடியுமா? இலங்கையில் ஒடுக்கப்படும் சமூகங்களில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள் மலையக மக்கள். அதிலும் குறிப்பாக மலையகக் குழந்தைகள் பிற சமூகங்களை விடவும் ‘அடிப்படை உரிமைகளால்’’ ஒடுக்கப்பட்டவர்கள். இலங்கை முழுவதும் மலையகப் பிள்ளைகள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அந்தத்த பகுதிகளில் இருக்க கூடிய ஒடுக்குமுறை வடிவங்களுக்கும், மனநிலைகளுக்கும் அவர்கள் பலியாகின்றார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் அதிகாரம், பணம் போன்றவையுள்ள அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதலாளிகள் வீடுகளில் வேலை செய்யக்கூடிய பிள்ளைகளில் பெரும்பகுதி மலையகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர். யாழ்ப்பாணத்து ‘தடித்த’ மொழியில் சொன்னால் ‘எஸ்டேட் ஆக்கள்’ ‘வடக்கத்தையார்’ வீட்டுப் பிள்ளைகள். அதுமட்டுமன்றி கார்மென்ஸ்கள், புடவைக்கடைகள் முதலியவற்றில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாயும் மலையகத்து வம்சாவழியைச் சார்ந்தவர்களாயும் உள்ளனர்.

மலையக அல்லது இந்திய வம்சாவளி பிள்ளைகள் வேலைக்கமர்த்தப்படுவதில் யாழ்ப்பாணத்தில் இரண்டு கரிசனைகள் ஆதிக்கத் தரப்பிடம் இருக்கிறது. ஒன்று மிகவும் குறைந்த சம்பளத்தில் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும். இரண்டாவது மலையக மக்கள் யாழ்ப்பாணத்து சாதிக்கட்டமைப்புக்கு வெளியே இருப்பவர்கள். ஏனெனில் சாதியால் ஒடுக்கப்படும் பிற சமூகங்களை விடவும் மலையக மக்களை கீழ்த்தனமாக நடத்தவும் கருதவும் கூடிய சமூகங்களே இலங்கை முழுவதும் இருக்கின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிய மனநிலையில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய வீட்டினுள்ளும் படுக்கையறைக்குள்ளும் சமையலறைக்குள்ளும் செல்வதைக்காட்டிலும் மலையகப் பிள்ளைகள் செல்வது அவர்களுடைய ‘ஆதிக்க சமூகத்தில்ல்’ இழிவாகக் கருதப்படுவதில்லை.

முஸ்லீம் சமூகத்தில் இருக்க கூடிய ஆதிக்கத் தரப்பினரும் சரி, சிங்கள ஆதிக்க தரப்பினரும்சரி குறைந்த வருவாயில் வீட்டு வேலைகளைச் செய்துகொள்ளவுமாக மலையகப் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துகின்றனர். ‘நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்கிறோம், அவர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறோம்’ என்றவகையான எண்ணங்களும் இருக்கின்றன. ஏனெனில் ஆதிக்க தரப்பு தங்களின் மனசாட்சிக்கு அஞ்சியோ அயலவர்களையோ சமாளிக்க அல்லது உண்மையாகவே அந்தப்பிள்ளைகளின் மீது கரிசனையுடன் நடந்து கொண்டாலுமே அடிப்படையில் ’குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் கூடாது’ என்ற சமூக நீதிக்கும் சட்டத்திற்கும் புறம்பான செயலைச் செய்கிறோம் என்ற சிந்தனை கொஞ்சமும் அவர்களிடம் கிடயாது. பிள்ளை நேரடியாக உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ சித்திரவதைப்படுத்தப்படவில்லை என்பதைக்காட்டிலும் அதனுடைய ‘பிள்ளைப்பராயமும் உரிமையும்’ பறிக்கப்படுவதும் துஷ்பிரயோகமே ஆகும்.

‘பெரிய’ வீடு ஒன்றில் பிள்ளை ஒன்று வேலைக்கு அமர்த்தப்படுவது ‘இயல்பாக்கப்பட்டிருக்கிறது’ நம்முடைய அயலில் உள்ள எத்தனை வீடுகளில், நிலங்களில் பொருளாதாரத்தாலும், சாதியாலும், இனப்பாகுபாட்டாலும் ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் வேலைசெய்கிறார்கள்? அன்றாடம் நாம் ஒவ்வொரு பிள்ளையாகக் அநுதாபங்களோடு கடந்து போகிறோம். கதையிலாவது செ.கதிர்காமநாதன் வள்ளியை விடுவிக்கிறார். அசலான வாழ்க்கையும் அதன் சமூக நடைமுறையும் வேறானதாக இருக்கிறது இல்லையா? வித்தியாவும், சேயாவும், ரெஜினாவும் இஷாலினியும் இறந்து போகும் போது சமூகம் மிகவும் குத்தி முறிந்து அவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கிறது. ஆனால் அன்றாடத்தில் வேலைக்கு அமர்த்தப்படும் குழந்தைகள்மீது, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் மீது அக்கறையின்றியே இருக்கிறது. அது ஒரு ’எரியும் செய்தியாக’ மாறும்வரை காத்திருக்கிறது. பிரபலமான இடங்களில், ஒரு சினிமாக் காட்சியைப் போல் விபரிக்கத்தக்க, துப்பறியத்தக்க, கட்டுக்கதைகளுடன் கூடிய செய்திக்குப் பிறகே நீதி பற்றிப்பேசுவோம் என்று காத்திருக்கின்ற சமூகம் வன்செயலில் ஈடுபடும் தனிநபர்களைவிடவும் மோசமானது இல்லையா?

3

ஏற்கனவே நமக்குள் எரிந்துகொண்டிருக்கும் இனவாதத்தை உள்ளே வைத்துக்கொண்டு, ரிசாட்டைக் கண்டிக்கிறோம், என்ற பெயரில் இஷாலினிக்குரிய நீதிக்கு நாம் ஒரு ’அஜெண்டாவை’ உள்ளூர வைத்திருப்பது பச்சையாகத் தெரிகிறது. ஏனெனில் நாம் ரெஜினாவுக்கு ஒரு மாதிரியும் இஷாலினிக்கு இன்னொருமாதிரியும், செயாவிற்கு வெறொரு மாதிரியும் நடந்துகொள்கிறோம் இல்லையா? சமூகம் குழந்தைகள் இம்சிக்கப்படுவதை ‘அன்றாடமாக’ ‘இயல்பாகக்’’ கருதப் பழகிக்கொண்டு தன்னுடைய ஆன்மாவிடமிருந்து விலகிப்போகிறது. இது யாருடைய குழந்தை ? என்ன நடந்தது ? எப்படி நடந்தது? என்ற செய்திகளுக்கும் விபரிப்புக்களுக்கும் அன்றாடம் காத்திருக்கிறது. ஒரு வெளிப்படுத்தப்பட்ட அநீதிக்குப் பிறகு , சுவர்ப் பல்லியைப் போல உச்சுக்கொட்டிக்கொண்டே ஒரு சினிமாக்கொட்டகையை விட்டு வெளியேறுவது போல வெளியேறிச்செல்கிறது.

ஏன் மலையக மக்கள், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள், பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள், தொடர்ச்சியாக குறைந்த சம்பளக் கூலிகளாக இருக்கிறார்கள்? ஏன் அவர்கள் வீட்டுக்குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது ? ஏன் துஷ்பிரயோகங்கள் இயல்புபடுத்தப்பட்டிருக்கிறது? நீதி கேட்பதில் இந்தச் சமூகத்திடம் உள்ள தெரிவுகள் எத்தகையவை? ஏழை – பணக்காரர் சண்டை என்ற உலகப்பொதுவான சண்டைக்குப் பின்னால் இருக்க கூடிய கூட்டு அநீதிகள் எவை? குறிப்பாக குழந்தைகள் மீதும் அவர்களின் உரிமைகள்,சுயமரியாதை, சமத்துவம் பற்றிய சமூகத்தின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கிறது? சட்டத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள சூழலை எவையெல்லாம் தூரப்படுத்துகின்றன?

இந்த கூட்டு அசட்டைத்தனம், அநீதியை இயல்பாக்குதல், வேறொரு வெறுப்பின் பயனுக்காக இதைப்பயன்படுத்திக்கொள்ளுதல் முதலானவற்றைத்தாண்டி, அசலாகவே இவ் அநீதிக்கு எதிராகச் சிந்திக்க கூடிய இந்தச்சமூகத்தின் காத்திரமான ஆன்மாக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதையும் அவதானிக்கிறோம். மீண்டும் மீண்டும் நடக்கும் இச்செயல்களை தனித் தனிச் சம்பவமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் பிரச்சினை. இவை எல்லாம் சங்கிலித் தொடரானவை. ஒன்றை ஒன்று ஆரத் தளுவியவை. மலையக மக்களுக்கு உரிய வருமானம் இல்லாமல் முதலாளிகள் ‘சாக்குச்சொல்லியே’ தசாப்பதங்களை இழுப்பதற்கும் இஷாலினியின் கொடும் சாவுக்கும் உள்ள தொடர்பை த்தேடிப்போனாலே ஏனைய சங்கிலிகள் கிளம்பி மேலே வரும். இவற்றைப் புரிந்து கொள்வதையும் மாற்றுவதையும்தான் சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு, அரசியல் மயப்படுதல், சிந்திப்பது, கூட்டுச்செயற்பாடு, அமைப்பாவது போன்ற சொற்களால் வியாக்கியானப்படுத்துகிறோம். முழுவதுமாக இச்சமூகம் அறமோ, கரிசனையோ அற்றதென்று கூற முடியாது, ஆனால் அறமோ, கருணையோ, ஏன் அன்போ கூட அரசியல் மயப்படாத போது அவற்றால் செய்யக்கூடியவை என்று எதுவும் இல்லாமல் போகின்றது.

யதார்த்தன்

Related posts

பிணமெரியும் வாசல்

vithai

தொ.பரமசிவன் – அரசியல்மயப்பாடும் நிலைப்பாடும்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

vithai

கபன் சீலைப் போராட்டம்

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி

vithai

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

vithai

Leave a Comment