வட்டுக்கோட்டையில் உள்ள முதலி கோயிலடி சனசமூக நிலையத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கலந்துரையாடலின் ஆரம்பத்தினை சனசமூக நிலைய தலைவர் ரஜீவன் அவர்கள் வழங்கினார். பின்னர் விதை குழும செயற்பாட்டாளர்கள் யதார்த்தன் மற்றும் கிரிசாந் ஆகியோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய சிறு அறிமுகத்தையும் ஆரம்ப உரையாடலையும் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கென வெளிவந்து கொண்டிருக்கும் அறிந்திரன் இதழின் ஆசிரியரும் சுயாதீன ஊடகவியலாளருமான கணபதி சர்வானந்தா அவர்கள் ‘அறிந்திரன் இதழ்’ தொடர்பான அறிமுகத்தையும் வாசிப்பின் முக்கியத்துவத்தினையும் பற்றி கலந்துரையாடினார்.
அடுத்து, வாசகரும் ஆய்வாளருமான ச. சத்தியன் அவர்கள் வாசிப்பின் நோக்கங்களைப் பற்றியும் மாற்றுச் சிந்தனைகளைத் தூண்டுதல் பற்றியும் கலந்துரையாடினார்.
இறுதியாக பசுமைச் சுவடுகள் அமைப்பினர் தமது அமைப்பின் செயற்பாடுகள் பற்றி சிறு அறிமுகத்தை வழங்கியதோடு அவ்வூரின் குளக்கரையில் மருத மரங்களை கிராம மக்களுடன் இணைந்து நாட்டினர்.
வாசிப்பின் தேவைகள் பற்றியும் அதனூடாக விளையும் சமூக நலன்களைப் பற்றியும் மூன்று வித்தியாமான பார்வைகளை உள்ளடக்கிய நிகழ்வாக அம்மாலையை வாசிப்பின் பயன்களை நோக்கி நகர்த்தும் நிகழ்வாக அமைந்தது.
தோழமையுடன்
விதை குழுமம்