vithaikulumam.com
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

குட்மோர்னிங் டீச்சர்

ஊர்காவற்றுறையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் காலை வணக்கம் (குட்மோர்னிங்) சொல்லாததற்காக அடித்தபோது தடி மாணவரின் கண்ணில்பட்டது. அதன் பின்னர் அந்த பாடசாலை அதிபரும் அன்றைய தினம் மாணவரைத் தண்டித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குறித்த மாணவர் அந்தப் பாடசாலையின் விடுதியில் தங்கியே தனது கல்வியைத் தொடர்கிறார். இந்த சம்பவத்திற்காகப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரையும் சுமூகமாகச் செல்லச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். தீவக வலயக் கல்விப் பணிப்பாளருடன் விதை குழுமம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களது தரப்பிலான விசாரணை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் பாடசாலை தொடங்கியதும் ஆரம்பிப்போம் என்றும் சொல்லியிருந்தார்.

இந்தச் சம்பவம் நடந்த பின்னர் சமூக வலைத்தளங்களிலும் பொதுச் சமூகத்திலும் விவாதப் பொருளாக ஆகியிருந்தது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் இப்பொழுது தான் அடிக்கத் தொடங்கியிருப்பது போன்றும், இது ஒரு ஆச்சரியகரமான சம்பவம் என்பது போலும் பலரதும் கருத்துகள் இருந்தன. யதார்த்தத்தைப் புறம்தள்ளி ஒரு கற்பனையான சமூகமாக நாம் வாழ முடியாது. ஏராளமான குழந்தைகளும் சிறுவர்களும் ஒவ்வொரு நாளும் உடல் மற்றும் மன ரீதியிலான தண்டனைகளுக்கு உள்ளாகுகிறார்கள். அவர்களின் வாழ்வை ஒரு சித்திரவதைக் கூடமாகவே இன்னமும் விட்டு வைத்திருக்கிறோம். மேற்சொன்ன ஊர்காவற்றுறை ஆசிரியரினதும் அதிபரினதும் செயலுக்கு கண்டனங்கள். அதே வேளை குழந்தை வளர்ப்பில் தண்டனையின் பாத்திரமும் அவை உருவாக்கும் ஆளுமை வடிவமைப்பையும் நாம் தனியே ஒரு சம்பவத்துடன் சுருக்கக் கூடாது.

அண்மையில் ஒரு தாய் தன்னுடைய சிறு குழந்தையை அடித்தமை காணொலியாக வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நம் பொதுச் சமூகம் கொடுமையை நேரில் பார்க்கும்போதே கொதித்தெழுவதாக உள்ளது. நம்மைச் சுற்றிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஆசிரியரால் அப்பாவால் அம்மாவால் மாமாவால் அவர்கள் மீது அதிகாரம் உள்ளதாகக் கருதும் யாரோவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும்போது நாம் என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். அமைதி காக்கப் போகிறோமா அல்லது குழந்தையைக் காப்பற்றப் போகிறோமா, குழந்தையைக் காப்பற்றுவதே இங்கு அறம். பள்ளிக்கூடங்கள் மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை விரட்டியபடியே இருக்கின்றன. குழந்தைகள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடைய குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள். வேளைக்கு வளர்ந்து விட்டால் இந்தத் தண்டனைகளிடமிருந்தும் புற அழுத்தங்களிலும் இருந்தும் தப்பிவிடலாம் என்று சிந்திக்கிறார்கள். வளர்கிறார்கள்.

ஒரு பாடசாலையில் குட்மோர்னிங் சொல்லாதது அவ்வளவு பெரிய பிரச்சினையா என்று கேட்டால் பதில் ‘ஓம்’ தான். ஒவ்வொரு முறையும் ஆசிரியர், அதிபர் அல்லது கல்வி சார்ந்த அதிகாரிகள் வரும் போதும் செல்லும் போதெல்லாம் குழந்தைகள் எழும்ப வேண்டும், குட்மோர்னிங் சொல்ல வேண்டும். ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மும்மொழியிலும் சொல்ல வேண்டும். இது பெரும்பாலான பாடசாலைகளில் இன்று வரை இறுக்கமான நடைமுறை, பழக்க வழக்கம் கற்பிக்கிறோம் என்ற பெயரில் பெரியாட்களுக்கு மரியாதை குடு, எழும்பி நில், ஓடாத, சிரிக்காதை, காலுக்கு மேல கால் போடாதை, கதிரையில் ஒழுங்கா இரு, கதிரையில நிக்காதை போன்ற பல்வேறு வகையான கட்டளைகள் மூலமே பெரும்பாலனவர்கள் பிற்போக்குத்தனமாக நம்பும் ஒழுங்கான வகுப்பறை உருவாக்கப்படுகிறது. அங்கு நீங்கள் குட்மோர்னிங் சொல்லவில்லையென்றால் பெரிய ஒழுக்கக்கேட்டைச் செய்தவர்கள் ஆவீர்கள். வகுப்பறை ஒழுக்கங்கள் என்ற பெயரில் குழந்தைகளின் இயல்புக்கு எதிரான வழமைகளை அவர்களின் மீது திணிக்கிறார்கள். கற்றல் ஒரு வகை சர்க்கஸ் பழக்குதல் போல் ஆகிவிட்டிருக்கிறது. மிருகங்களைப் பழக்குபவர்களின் கையில் ஒரு தடியிருக்கும், அது தான் கட்டளைகளுக்குச் சிங்கத்தையோ யானையையோ கூட மண்டியிடச் செய்கிறது. அப்படித் தான் எங்கள் குழந்தைகளுக்குள் உள்ள தன்னம்பிக்கை சுயமரியாதை ஆகியவற்றை மெல்ல மெல்ல அழிக்கிறோம்.

பெரியவர்களை மதிக்க வேண்டும், கனம் பண்ண வேண்டும் என்பது பெரியவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொய். எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும். வயது, பால், மத, இன, மொழி பேதமற்று யாரையும் மதிக்கக் கற்றுத் தர வேண்டுமே தவிர வயதில் மூத்தவர்கள் என்பதற்காக ஒருவரை வணங்க வேண்டும் என்பது அதிகாரக் கீழ்படிவு மனநிலையை உருவாக்குவது. காலில் விழுவது சுயமரியாதைக்கு எதிரான ஒன்று என்பது நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதேயில்லை. காலில் விழு அது தான் நற்பண்பு என்று நம்பவைக்கப் படுகிறார்கள்.

நமது வகுப்பறைகள் இன்னமும் ஒருவழிப் பேச்சுக்கள் தான். உரையாடலினதும் அனுபவங்களின் வழியினதுமான கற்றல் இன்னும் சாத்தியப்படவில்லை. ஒழுக்கத்தை உணர்த்துவதின் வழி உருவாக்காமல் தண்டனைகளின் மூலமும் கட்டுப்பாடுகளின் மூலமும் உருவாக்குவதால் ஒரு கட்டத்தில் பொது ஒழுக்கங்கள் மீறியே ஆகவேண்டியவை என்று சிறுவர்கள் கருதுகிறார்கள். குட்மோர்னிங் சொல்லவில்லையென்றால் அது எதுவோ ஒன்றின் எதிர்ப்பு, அக்கறையின்மை, சலிப்பு.

ஆயிஷா நடராசன் “இது யாருடைய வகுப்பறை?” என்ற புத்தகத்தில் இன்றைய ஆசிரியர்கள் முதன்மையாக குழந்தை உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் என்று குறிப்பிடுவார். நமது குழந்தைகள் மீது தனக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள், பாடத்திட்டங்களுக்கு உட்பட்ட குழந்தையாக அவர்களை ஆக்குவது தான் ஆசிரியர்களின் பணியென்றால் நாம் உருவாக்கப் போகும் எதிர்காலம் எத்தகையது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆசிரியர்கள் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய முதன்மையான தரப்பு. நாம் தான் அவர்களுக்கு வாழ்வு பற்றிய அறிவை அளிப்பவர்கள். எங்களுடைய குழந்தைகளை நாம் சிந்திக்கத் தெரியாதவர்களாக சுயமரியாதை அற்றவர்களாக துணிச்சலற்றவர்களாக பொது நலத்தை மதிக்காதவர்களாக ஆக்கப் போகிறோமா? அவர்களுக்கு நாம் இப்போது வழங்கும் கல்வியும் கல்வி முறையும் சரியானது தானா? யார் வேண்டுமானாலும் உத்தரவுகளையும் பாடங்களையும் முறைமைகளையும் வகுக்கலாம். ஆனால் இறுதியில் அவற்றைக் குழந்தையை நம்பச் செய்வது ஆசிரியர்கள் தான். நாம் அளிக்கும் கல்வியும் முறைமையும் சரியானது தானா? இவை உருவாக்கி வைத்திருக்கும் அழுத்தங்களில் இருந்து எமது குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருடையதும் சமூகத்தினுடையதும் ஆகும்.

தோழமையுடன்
விதைகுழுமம்

Related posts

உதவிக்கரம் நீட்டுவோம் – கணக்கறிக்கை

vithai

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

vithai

கபன் சீலைப் போராட்டம்

vithai

சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம்

vithai

Leave a Comment