vithaikulumam.com
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

காலம் காலமாக நடந்துவரும் போராட்டங்கள், சட்ட மாற்றங்கள் என்பவற்றையும் மீறி நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இரண்டு வார்த்தைகளில் உலகே ஸ்தம்பித்து விடும்படி கொடுக்கப்பட்ட பதிலடிதான் Me Too என்று அறியப்படும் “நானும் கூட” என்னும் இயக்கம் என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனென்றால் இன்று இந்தப்பகிர்வுக்குறியீட்டின்(hashtag) அதிர்வலைகளைஉணராத ஒரு மூலை, முக்கியமாக மேற்குலகில், இல்லை என்றே சொல்லலாம். Me Too இயக்கத்தின் பின்னணி, அது ஏற்படுத்திவரும் சமூக மாற்றங்கள் என்பவற்றைச் சுருக்கமாக இக்கட்டுரைநோக்குகிறது.

பெண்ணிய இயக்கம், முக்கியமாக மேலைத்தேய, வட அமெரிக்கப் பெண்ணிய இயக்கம் 19ம் நூற்றாண்டு இறுதியில் ஆரம்பித்த காலம் முதல் பல்வேறு வகைகளில் வளர்ந்தும்விரிந்தும்வந்துள்ளது. ஒவ்வொரு தலைமுறைக்குமானதேவைகள், அவற்றின் வாழ்வனுபவங்கள் என்பவைக்கேற்பப் பெண்ணியப்போக்கிலும் பொதுவான சில தலைமுறைகளை அல்லது அலைகளை வகுக்க முடியும். அவை ஒவ்வொன்றும் முழுமையாகக் காலத்தாலோ கருத்தியலாலோ வரையறுத்து வரைவிலக்கணப்படுத்தப்பட முடியாதவை எனினும் பொதுவான போக்குகளை வகுத்து நோக்குதல் பெண்ணியத்தின்தலைமுறை மாற்றங்களைப் புரிந்து கொள்ள உதவும்.

முதற் பெண்ணிய அலை உருவான போது பெண்ணின் இடம் சமையலறை மட்டுமேயாக இருந்தது. அவளுக்கு வாக்குரிமை, சொத்துரிமை உட்பட எந்த ஒரு உரிமையும் இருக்கவில்லை. இந்தப்பின்னணியில்உருவானஆரம்ப காலப் பெண்ணியம் பெண்களுக்கான சட்ட உரிமைகளுக்கானபோராட்டங்களை முன்னெடுக்கும்தன்மையைப்பிரதானமாக்கொண்தாகஅமைந்தது. இரண்டாம் அலைப் பெண்ணியம் 20 ம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தொடங்கி பெண்களுக்கான அரசியல், சமூக சம அந்தஸ்துஎன்பவற்றுக்கான தொடரும் போராட்டங்களை முன்னெடுப்பதாகஅமைந்தது. இந்த இரண்டு பெண்ணிய அலைகளும் மேலைத்தேயத்தில் அவற்றின்போராட்டங்களின் பயனாககுறிப்பிடத்தக்களவு சட்ட ரீதியான வெற்றியைப் பெற்றிருந்தன. இதன்பயனாக 1990 களில் பெண்கள், –குறிப்பாக வெள்ளையின மேல்தட்டுப் பெண்கள்-நிறுவனங்களின் முகாமையாளர்களாகவும் அரசியலில் முக்கியத்துவம் வகிப்பவர்களாகவும் வர முடிந்தது. இதன் பின்னர் பின்-பெண்ணியம் என்றும், பெண்ணியம் அவசியமற்றுப் போய்விட்டதென்றும் சொல்லும் கருத்துக்கள் உருவானாலும், முதல் இரண்டு பெண்ணிய அலைகளின் மீதான விமர்சனங்களுடனே மூன்றாவது பெண்ணிய அலை தோன்றியது. கட்டுடைப்பு, பாலியல் சுதந்திரம், கருக்கலைப்புக்கான சுதந்திரம் என்பவை இதன் பேசுபொருளாய்அமைந்தன. நிறத்தாலும், வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான போராட்டமாகவும் இது அமைந்தது.

2010களின்ஆரம்பத்தில் உருவான, சமூக வலைத்தளம், இணையம் என்பவற்றினைத்தளமாகக்கொண்டிருக்கும் தற்போதைய பெண்ணிய அலைநான்காவதுஅலையாக பலராலும் பார்க்கப்படுகிறது. அண்மையில் சமூக வலைத்தளங்களுக்குள்ளால் பரவி உலகையே சில காலம் திருபிப்பார்க்க வைத்த Me Too எனப்படும்“நானும் கூட” என்னும் பகிர்வுக்குறியீட்டுசெயற்பாட்டை இந்த வடிவத்திலானபெண்ணியத்தின் ஒரு வெளிப்பாடாகப் பார்க்க முடியும். இன்றைய பெண்ணியம்அது பேசும் விடயத்தில்மட்டுமன்றி, அது பேசும் விதத்திலும் தனிச்சிறப்பினைக்கொண்டதாகஇருக்கிறது. இன்று நாம் இத்தகைய பெண்ணிய எழுச்சிகளைப் பரவலாகக் காண்கிறோம். டொனால்ட் ற்றம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து வட அமெரிக்காவின் பல பகுதிகளில் ஒருக்கிணைக்கப்பட்ட நடை பவனிகள், இணையம் மூலமான போராட்டங்கள் என்பவை இதற்குச் சில அண்மைய உதாரணங்கள்.

’நானும் கூட’ என்னும் இந்த சமூக வலைத்தளப் பகிர்வுக் குறியீட்டின் முக்கியத்துவம் அது தனிப்பட்டவரின் சொந்தக் கதைகளை முன்னிறுத்துவதாகும். ஒரு சமூகமாக நாம் புள்ளிவிபரங்களையோ, சட்டம், நீதி, காவற் துறைகளின் போதாமைகளையோ இலகுவில் கடந்து போய் விட முடிகிறது. ஆனால் ஒரு பாதிக்கப்பட்டவரின் சுய சாட்சியத்தைப் பார்த்தபின் அல்லது கேட்டபின் அதை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடிவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி உலகப் பெண்களில் மூன்றில் ஒருவர் ஏதாவது ஒரு பாலியல் வன்முறை அல்லது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதை நாம் தெரிந்து வைத்திருப்பினும் ஒரு வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நேரடி அனுபவத்தை அவளது உணர்வுகளோடு சேர்த்துப் புரிந்து கொள்வது என்பது நம் சமூகத்துக்கு அதைவிட ஆழமானதாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, அவசியமான அம்சமாக இருக்கிறது.

Me Too என்னும் இந்தக் குறியீட்டு வார்த்தை முதன் முதலாக 2006இல் MySpace என்னும் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தப்பட்டது. தரானா பேர்க் என்னும் அமெரிக்கக் கறுப்பின பெண் செயற்பாட்டளர் ஒருவர் இதனை உருவாக்கினார். ஒரு சிறுமி தன்னிடம் அவளுக்குநடந்த பாலியல் தாக்குதலைக் கூறிய போது, பதிலளிக்க முடியாமல் போனதாகவும் “நானும் கூட” என்று சொல்ல வேண்டும் என்று பின்னர் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2006 இல் முதலில் பாவிக்கப்பட்டிருந்தாலும் 2012 இலேயே இன்று நாம் காணும் Me Too என்னும் வார்த்தை மீளப் பரவலாக்கப்பட்டது.அமெரிக்க ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வே வீன்ஸ்டீன் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு இந்த பகிர்வுக்குறியீட்டின் இணைய மீள்தொற்றுக்குக்காரணமாயிற்று. அலிசாமிலானோ என்னும் நடிகை இக்குற்றச்சாட்டுதொடர்பாகமுதன் முதலில் இதனைப்பயன்படுத்தினார். இதைத்தொடர்ந்து பத்துக்கும் அதிகமான ஹொலிவூட்டினைச் சேர்ந்தபெண்கள் ஹார்வேவீன்ஸ்டீனின்பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் தொடர்பான குற்றசாட்டுக்களை முன்வந்து குறிப்பிட்டிருந்தனர்.

அலிசா மிலானாவின் பிரபலமான முதலாவது பகிர்வில், பாதிக்கப்பட்டவர் ஒவ்வொருவரும் Me Too என்று பதிவிட்டால் பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் என்பன எவ்வளவு தூரம் விரவியுள்ளபிரச்சனைகள் என்பது அனைவருக்கும்தெளிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர்கூறியது போல, பாலியல் தாக்குதல், வன்முறை என்பன எவ்வளவுதூரம் நம்மைச்சூழ, மிக அண்மைவரைவிரவியிருக்கின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது, அல்லது பலர் அதைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை, அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். ஒரு தாக்குதலுக்கு உள்ளான பெண், பல்வேறு காரணங்களால் அதனைப் பகிர்வதைத் தவிர்க்கிறாள். இன்னொரு பெண்ணிடம் சிலவேளைகளில் பகிர்ந்தாலும் இன்னொரு ஆணிடம் பெரும்பாலும் அவள் அதைப் பகிர்ந்து கொள்வதில்லை. அதற்கானகாரணங்களாகஉளக்காயங்களை ஏற்படுத்தும் நினைவுகளை மீட்க விரும்பாமை, குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகியிருத்தல், சமூகப் புறமொதுக்கலுக்குப் பயப்படுதல், அல்லது சொல்வதால் எந்தவொரு பயனும் இல்லை என்ற முடிவுக்கு வருதல் என்பனவற்றில் ஒன்றாகவோஅல்லதுஎல்லாமாகவோஇருக்கலாம். ஆனால் இப்படிச் சொல்லாமல் இருப்பதன் ஆபத்து என்னவென்றால் அந்தப் பிரச்சனை, இருப்பது தெரியாமலே பூதாகரமாக நம்மைச் சுற்றி பரவியிருக்கிறது என்பதுதான். உண்மையில், பாதிக்கப்பட்டஒருவரின் மௌனமே, பல பெண்களைத்துன்புறுத்திய ஒரு குற்றவாளி தண்டனைகள் எதுவுமின்றிப் பாதுகாக்கப் படுவதற்குக் காரணமாகிவிடுகிறது.

ஆயினும்,Me Too இயக்கத்தில் பங்குபற்றிய பெண்களின் நோக்கம் குற்றவாளிகளைத்தண்டிப்பதாக இருக்கவில்லை. பகிர்தலாகவே இருந்தது. அதன் மூலம் சமூகத்துக்குப் பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் என்னும் ஒரு பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருந்தது. அதற்கான ஒரு வெளியாக சமூக வலைத்தளங்கள் அமைந்தன.

சமூக வலைத்தளம் ஒரு வரையறைகளின்றி இயங்கும் ஊடகம். சாதாரண ஊடகங்கள் போல அன்றி, ஒவ்வொரு தனி மனிதரும் செய்தியாளராகவும் சாட்சியாகவும் சமூக வலைத்தளங்களில் மாற முடிகிறது. அதுமட்டுமன்றி, பக்கச்சார்பற்றோ ஆதாரத்துடனோ இருக்க வேண்டுமென்ற பழுவின்றி என்ற எந்த விதப் போர்வையும், தடையும் இன்றி, தமது மனக்கிடையை ஒரு நண்பருடன் பகிர்வது போல முழு உலகுடனும் பகிர முடிகிறது. பார்வையாளர் பகிர்பவரை தனிப்பட அறிந்திருக்காததால் எந்தவித முன்முடிவுகளும் இன்றி சாட்சியங்களை அணுக முடிகிறது.

Me Too இயக்கமும் இவ்வாறு வரையறைகள் கடந்து பரவி வருகிறது. பாலியல் வல்லுறவுமட்டுமன்றி, பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் உட்பட்ட சகலதுக்குமானஒரு பகிரும்வெளியாகவும், பெண்கள் மட்டுமன்றி பாதிக்கப்பட்ட ஆண்களும், மாற்றுப்பாலினர், பாலியல் இருமைக்குள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாதவர்கள் என அனைவரும்பங்குபற்றும்வெளியாகவும்இந்தப்பகிர்வுக்குறியீடுமாறியது. இதனை யாரும் தனியுரிமை கொண்டாடவில்லை.

பகிர்வுக்குறியீடுஎன்பது ஒரு தலைப்பு தொடர்பில் ஒரு சமூக வலைத்தளத்தில்பேசப்படும்எல்லாப்பதிவுகளையும்ஒன்றிணைக்கும் ஒரு முறை. இலக்கக்குறியீட்டுடன்(#) ஒரு குறிப்பிட்ட சொல் இடப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு உரையாடலாகப் பதிவுகள் தொகுக்கப்படுகின்றன. பங்குபற்றும், பங்குபற்றாதஎல்லோருக்கும் பொதுவான ஒரு வெளியாக அமையும்இந்தப்பகிர்வுக்குறியீட்டின் தோற்றம் முதற்கொண்டுஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு தொழிற்றுறைகளிலும் இவ்வளவு காலமாய் பேசாமல் இருந்த பல பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிவரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரைப்பற்றி பாலியல் குற்றசாட்டுக்களைத் தலைப்புச் செய்தியாகத் தாங்கி செய்தித்தாள்கள் இன்றுவரைவந்து கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது ஒரு ஒன்றன்பின் ஒன்றான சங்கிலி இயக்கத்தைத் தொடக்கி விட்டுள்ளது. பகிர்வதால் எதிர்காலத்தில் இன்னொரு பெண்ணைப் பாதுகாக்க முடியும், குற்றவாளியை சமூகத்தின் முன் வெளிப்படுத்த முடியும், தம்மைப்போன்ற பல பெண்களுக்கு ஆதரவாக அமைய முடியும், பகிர்வதற்கான ஆதரவு வெளியை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கைகளைதொடர் பதிவுகள்ஏற்படுத்தத் தொடங்க மேலதிக பகிர்வுகள் சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நான்காம் அலைப் பெண்ணியமும் Me Too இயக்கமும் தனிப்பட்டவர்களின் கதைகளைப் பேசுபொருளாகக் கொண்டு செவிமடுத்தலை மையப்படுத்துகின்றன. இவற்றின் நோக்கம் ஒரு உறுதியான தீர்வு ஒன்றை நோக்கியதாக அல்லாமல் பிரச்சனைகளைவெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. இதன் மூலம் சட்டத்தீர்வு உட்பட தனி ஒரு பிரச்சனைக்காக வழங்கப்படும் எந்த ஒரு தீர்வையும் விட மேலதிகமான ஒரு விடயத்தை இவை கோரி நிற்கின்றன. அது தான் சமூக மாற்றம். சமூகத்தின் பொது மனசாட்சியை உறுத்தும் கதைகளைச் சமூகம் செவிமடுக்கத் தொடங்கும் போது இந்த மாற்றத்துக்கானவிதைகள்இடப்பட்டுவிடுகின்றனஎன்றே சொல்லலாம். எது சரி எது பிழை என்பதைச் சட்டத்தாலும் ஆண் மையச் சிந்தனை முறையாலும் அன்றி பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளால் வரையறை செய்ய Me Too இயக்கம் உதவி வருகிறது.

Me Too இயக்கத்தின் முக்கியத்துவம் மூன்றுகாரணங்களால்தனித்துவச்சிறப்புக்கொண்தாகஅமைகிறது.முதலாவதாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குஏற்படக்கூடிய உடனடி உளவியல் நன்மை. இரண்டாவது கிட்டக்கூடிய தீர்வு அல்லது முன்னேற்றம். மூன்றாவதாகஇவை எல்லாவற்றையும் தாண்டி சமூகத்தின் போர்வைக்கடியில் உள்ள அடிப்படை மனோபாவத்தை மாற்றுவது. இந்த மூன்றாவது மாற்றமே அதிக முக்கியமானது.

பாதிக்கப்பட்டவரைப் பொறுத்தவரை குற்ற உணர்ச்சியில் இருந்தும் , எனக்கு மட்டுமே இது நடக்கிறது என்கிற தனிமை உணர்வில் இருந்தும் விடுபட இந்த இயக்கம் உதவியுள்ளது. பாதிக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்ளும் ஒரு ஆதரவு வெளி இதன்மூலம் பல பெண்களுக்குக் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டுதலும் அதன் காரணமான குற்ற உணர்ச்சியும் அதிகம் பேசப்பட்ட விடயங்களாக இருந்த போதும் அவற்றின் ஆழம் பலருக்குப் புரிவதில்லை. தன்னைத்தானே நொந்துகொள்ளக் கற்பிக்கப்படும் ஒரு பெண்ணுக்கு அநீதிக்குள்ளான யாருக்கும் வரக்கூடிய ஒரு கோபம் கூட மறுக்கப்பட்டு விடுகிறது. இந்த மனநிலையில் இருந்து மாறுவதே பல பெண்களுக்கு, குறிப்பாக மிக இளைய வயதில் தாக்கப்பட்டவர்களுக்கு, மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பகிர்வதன் மூலம் அல்லது ஆகக் குறைந்தது இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணின் பகிர்வில் தன்னை உணரும்போது, தன் சொந்த மனநிலையில் இருந்து தானே விடுபட ஒரு பெண்ணுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

’நானும் கூட’இயக்கத்தின் மூலம் வேறு எந்த வழியிலும் இலகுவில் குற்றம் சாட்டப்படவோ, சட்டத்தின் முன்னிறுத்தவோ முடியாதிருக்கும் பலம் வாய்ந்த ஆண்களை அம்பலப்படுத்திசமூகத்தின் முன்னால் நிறுத்த முடிகிறது. பணத்தாலும் பதவி, செல்வாக்கு என்பவற்றாலும் தமது குற்றங்களில் இருந்து தப்பிவிடுவது மட்டுமன்றி மீண்டும் மீண்டும் அதேபோன்ற குற்றங்களைப் பின்விளைவு தொடர்பான அச்சமின்றி சில ஆண்களால் புரிய முடியும் என்ற நிலையை இந்த Me Too இயக்கம் மாற்றிவிட்டுள்ளது. அதனால் தான் திரைப்படத்துறை ஜாம்பவான்கள் முதல் அரசியல்வாதிகள் வரை மிகவும் முக்கியமாக மக்களால் காணப்படும் துறைகளில் இருக்கும் பிரபலமும் சக்தியும் வாய்ந்த ஆண்கள் பலர் இன்றுபதவிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இது இணையத்தின், குறிப்பாக சமூக வலைத்தளத்தின் வெற்றி என்றே சொல்லலாம்.

Me Too இயக்கம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. இதற்கேயுரிய போதாமைகளுடன் மேலைத்தேய வெள்ளையினப் பெண்களால் கொண்டு நடத்தப்படும் பெண்ணியத்தின் போதாமைகளும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை. Me Too இயக்கம் ஒரு உறுதியான, நம்பிக்கையூட்டும் தீர்வைத் தருவதில்லை என்னும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பார்த்தலும் பகிர்தலும் பலரின் கரிசனைகளும் மட்டும் தீர்வுகளாகி விட முடியுமா என்கிற கேள்வியே இங்கு எழுகிறது, பல சமயங்களில் பகிர்வதனால் ஏற்படும் சமூக விளைவுகளை பாதிக்கப்பட்ட பெண்ணே ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த இயக்கம் எந்தவொரு சட்டத் தீர்வுகளையும் உத்தரவாதப்படுத்துவதில்லை. சட்டத்தீர்வுகளின் போதாமைகளை நிரப்பும் ஒரு வெளியாக இது அமைய வேண்டுமே அன்றி, சட்ட, நீதித் துறைகளுக்குப் பதிலான தீர்வுதரும் அமைப்பாகக் கொள்ளப்படக்கூடாது.

Me Too அமைப்பின் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டு அது வெள்ளையின, பிரபலம் பெற்ற, சமூக அந்தஸ்துக் கொண்ட பெண்களின் கதைகளையே முன்னிறுத்துகிறது என்பதாகும். சமூக வலைத்தளத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு இலகுவான பார்வை வட்டம் கிடைத்து விடுவது போல பல சாதாரண ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கிட்டுவதில்லை. சாதாரண பெண்களது துன்பங்கள் அதிகமானவை என்றாலும் அவை எல்லாரையும் இலகுவில் அடைந்து விடுவதில்லை. Me Too என்கிற பகிர்வுக்குறியீட்டினைமுதன் முதலில் பயன்படுத்தியவர் ஒரு கறுப்பினசமூகச் செயற்பாட்டாளர் என்றாலும் அது முதன்முதலில் பரவலாக பேசப்பட்டது திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட வெள்ளையினப் பெண் நடிகை ஒருவரின் குற்றச்சாட்டின் பின்னரே. எனவே இந்த இயக்கம் எவ்வளவு தூரம் நிறத்தாலும், வர்க்கத்தாலும் ஒடுக்கப்படும் பெண்களுக்கு உதவியிருக்கிறது என்பது கேள்விக்குரியதே.

திரைப்படத்துறையில் Me Too இயக்கம் ஆரம்பித்தமை இவ்வியக்கத்தை பலராலும் பார்க்கப்படும் இடத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளது. திரைப்படங்கள் ஒரு சமூகத்தின் பொதுப்புத்தியில் பாரிய தாக்கத்தை அறிந்தோ அறியாமலோ ஏற்படுத்துகின்றன. திரைக் கதாநாயகர்கள் மக்களினால் முன்னோடிகளாகப் பார்க்கப்படுகின்றனர். எனவே இந்த Me Too இயக்கம் இத்துறையில் ஆரம்பித்து இன்று பல துறைகளுக்கும் பரவியுள்ளதுடன் சாதாரண மக்களின் பொதுப்புத்திக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவியிருக்கிறது.

சமூகத்தில் மற்றையோரை விட அதிக சக்தி வாய்ந்தவர்களாய் இருப்பவர்களுக்கு அதனை உணர்ந்து கொண்டுதம்மை விடப் பலவீனமான மக்களுக்கு உதவும் கடப்பாடு இருக்கின்றது. இந்த இயக்கமும் அதனைச் செய்ய முயல வேண்டும். சமூக மாற்றம் என்பது இலகுவானதல்ல. இயல்பு நிலையையும் பழக்கப்பட்டவற்றையும் வலிந்து மாற்றும் போது சிரமத்தையும் குழப்பத்தையும் அது ஏற்படுத்துவது நியாயமே. எந்த ஒருமுக்கியமான மாற்றமும் இலகுவாய் நடந்து முடிந்ததாக வரலாறு இல்லை. வேலைத்தளக் கலாசாரம் மாற வேண்டும். அதற்கான உளவியல் மாற்றம், சிந்தனை முறை மாற்றம் என்பன Me Too மூலம் ஆரம்பித்துள்ளன.

நானும் கூட இயக்கத்தின் தொடர்ச்சியாக, Time’s Up என்னும் பகிர்வுக்குறியீடுஆரம்பிக்கப்பட்டு அடுத்த கட்ட மாற்றத்துக்கான உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறது. பாதிக்கப்பட்ட, வசதிகுறைந்த பெண்களுக்கான சட்ட நிதி வசதி போன்றவற்றை இப்புதிய இயக்கம் வழங்க எத்தனித்துள்ளது. இவ்வாறான சமூக வலைத்தள இயக்கங்கள் மிக நிகழ்காலத்தவை, இன்னும் அதிகளவில் கற்கப்படாதவை. அவை செய்தித்தாள்களில் இருந்து பெண்ணியப் பாடப்புத்தகங்களுக்குள் விரைவில் நுழையும் போது கோட்பாட்டு ரீதியாக மேலும் கற்கப்படும். அதற்கான வெளி இப்போது திறந்திருக்கிறது.

-அரசி விக்னேஸ்வரன்

(புதிய சொல் 09 இதழில் வெளியான கட்டுரை)

Related posts

கபன் சீலைப் போராட்டம்

vithai

குட்மோர்னிங் டீச்சர்

vithai

சிறுவர் உளநலம் : சில அவதானங்கள்

vithai

குழந்தைகளும் தண்டனைகளும்

vithai

சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம்

vithai

தனிமனிதரும் அமைப்புகளும்

vithai

Leave a Comment