vithaikulumam.com
செயற்பாடுகள்

முதற் திறப்பு

நூலகங்கள் என்பவை அலுவலகர்களால் பாதுகாக்கப்படுபவையோ, கட்டடங்களோ, பிரமாண்டமான றாக்கைகளால் நிரப்பப்பட்டிருப்பவையோ அல்ல. நூலகங்கள் புத்தகங்களிற்கும் வாசிப்பவர்களுக்குமிடையிலான உறவின் எண்ணக்கரு. நூலகமொன்றை உருவாக்குவதற்கான வெளி நம் ஒவ்வொருவர் வீட்டினுள்ளும் இருக்கிறது. நம் பள்ளிக்கூட நூலகங்கள் சிறுவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக்கொண்டே செல்கின்றன. அவை கண்ணாடி அலமாரிகளுக்குள் இருக்கும் காட்சிப்பொருட்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் அதைத் தூக்கி, பக்கங்களைப் புரட்டி, வாசனையை நுகர்ந்து, அதன் வண்ணத் தாள்களைத் தொடும்போதே அவை உயிர்பெறுகின்றன. இல்லையென்றால் நூலகங்கள் வெறும் தொல்பொருட் காட்சிச்சாலைகளாகவே எஞ்சும். புத்தகங்களிற்குள் இருக்கும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் மனிதர்களும் விலங்குக் காட்சிச்சாலையின் கூட்டிற்குள் நிற்பதை சிறுவர்கள் பார்க்கிறார்கள். அவற்றைத் திறக்கும் திறப்பை அவர்களிடமே கொடுக்கும் ஒரு முயற்சி தான் விதை குழுமத்தின் கிராம நூலகங்கள் என்ற செயற்திட்டம்.

எமது முதற் திறப்பாக, பாலிநகர் என்ற கிராமத்தில் உள்ள இரண்டு சிறுவர்களின் வீட்டின் ஒரு பகுதியை விதை குழும சிறுவர் நூலகமாக்கியிருக்கிறோம். புத்தகங்களின் காப்பாளர்கள் அவர்கள் தான். தங்களது நண்பர்களையும் இதில் இணைத்து அவர்கள் கற்கும் பள்ளிக்கூடத்திலும் தனியார் கல்வி நிலையங்களிலும் புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திற்கு முன் அவர்களுக்கான புத்தகங்களை சேர்த்திருந்தாலும், ஓரளவு இயல்பு நிலை திரும்பிய பின்னரே புத்தகங்களைப் பரிமாற முடிந்தது. வாசித்த புத்தகங்கள் தொடர்பில் குறிப்புகள் எழுதி வைக்கும் பழக்கத்தையும் சில சிறுவர்கள் ஆர்வத்துடன் செய்கிறார்கள். புத்தகங்கள் பற்றிய அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களது அன்றாடத்திற்குள் நுழையும் புத்தகங்கள் அவர்களின் கற்பனை உலகை விரித்துச் செல்கின்றன.

இன்றைய தினம் 23. 08. 2020, காலை பத்து மணிக்கு அவர்களது வீட்டில், புத்தகங்களை வாசிக்கும் அவர்களது நண்பர்களை அழைத்து நூலகத்தினை வீட்டினுள்ளும் பயன்படுத்த அழைத்திருந்தார்கள். இந்த அழைப்பே முதற் திறப்பு. பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. என்ன வகையான புத்தகங்களை அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள், அவர்களது தேவைகள் எவை, தொடர்ச்சியாக கதை சொல்லல், திரையிடல், கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் கதைத்தார்கள்.

இறுதியாக இந்த நூலகத்தை உருவாக்குவதற்கும் புத்தகங்களைக் கொள்வனவு செய்யவும் சில நண்பர்களும் ஹார்ட்லிக் கல்லூரியின் (2014 ஆம் ஆண்டு அணியினர்) பழைய மாணவர்களும் நிதி அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அவர்களுடைய உதவியை அந்தச் சிறுவர்களிற்கும் கிராமத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம். அவர்களுக்கு எமது நன்றிகள்.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

தொன்மயாத்திரை -5 தேவாலயங்களின் நகரம்

vithai

கதையும் பாட்டும் கதையும்

vithai

செட்டி குளம் பிரதேச மாணவர்களுக்கான உதவிகள்

vithai

தொன்மயாத்திரை – கடலுரையாடல்

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4

vithai

தொன்ம யாத்திரை – 3 நெடுந்தீவு முன்கள ஆய்வு

vithai

Leave a Comment